தமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..


அன்புள்ள சகோக்களே... 
”நூல்களை வாசிப்பவன், அவனின் மரணத்திற்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழ்கின்றான். வாசிப்பற்றவனோ ஒரே ஒரு முறைதான். ” என்கிறார் ஜார்ஜ் மார்ட்டின்.

அந்த ஓராயிரம் வாழ்க்கையில் ஒரு நூறு வாழ்க்கையையாவது வாழ்ந்துவிட வேண்டுமென்றே என் வாசிப்புப் பயணம் இன்றும் தொடர்கிறது.
எல்லோரையும் போல, ‪#‎சிறுவர்மலர்‬ - வெள்ளி இணைப்பு,‪#‎அம்புலிமாமா‬‪#‎முத்துகாமிக்ஸ்‬‪#‎லயன்காமிக்ஸ்‬‪#‎ராணி‬காமிக்ஸ், ‪#‎கோகுலம்‬‪#‎தெனாலிராமன்‬ கதைகள், ‪#‎முல்லா‬கதைகள், ‪#‎மாயாவி‬‪#‎பிக்கிக்கா‬‪#‎ராஜேஷ்குமார்‬‪#‎சுபா‬,‪#‎பட்டுக்கோட்டைபிரபாகர்‬‪#‎சிட்னிஷெல்டன்‬‪#‎அகதாகிறிஸ்டி‬என்றே வளர்ந்த என்னை, இன்றைக்கு ‪#‎ஓரான்பாமுக்‬,  ‪#‎தோப்பில்முஹம்மதுமீரான்‬,  ‪#‎ஜாரெட்டயமண்ட்‬‪#‎ராமச்சந்திரகுஹா‬,  ‪#‎ஹசன்அல்பன்னா‬,  ‪#‎சய்யித்குதுப்‬, இன்னும் பெயர்கள் விடுபட்ட பல இலக்கிய, இஸ்லாமிய ஜாம்பவான்கள் வரை கொண்டு வந்திருக்கிறதென்றால் வாசிப்பும், பரந்து பட்ட தேடலுமே காரணம். இன்றும் இந்தத் தேடல் முடிந்தபாடில்லை. முடியவும் மனம் விரும்பவில்லை.
என்னை ஆளாக்கியதும், ஒரு அடையாளம் பெற உதவியதும் இந்த வாசிப்பே தவிர வேறில்லை. விக்கிரமாதித்தன் கதைகளிலிருந்தும், சிறுவர் மலரின் ஓரத்தில் அச்சடிக்கப்பட்ட தத்துவங்களிலிருந்துமே என்னுடைய குணநலன்களை, ஆளுமையை மெருகூட்டியிருக்கின்றேன். அதே போல்தான் இன்றைக்கும் வாசிப்பு என்பது என்னை மாற்றிக்கொள்ள, என் பார்வைகளை மேம்படுத்த, என் கருத்துக்களை, கருதுகோள்களை சீர் தூக்கிப்பார்க்க, மெருகூட்ட உதவுகின்றது. அண்ட சராசரத்தைப் படைத்த இறைவன் நன்னீரையும், நன்னூல்களையும் மட்டுமே படைத்திருந்தால் போதுமானது என இன்னமும் யோசிப்பவள் நான். என்னுடைய வாசிப்பு உலகைப் பற்றியும், அதன் ஆரம்பம், இலக்கு, பயணம் என எல்லாத் திசையையும் அறிந்திட, உங்களுக்கும் ஓர் இனிய வாய்ப்பு... smile emoticon
எழுத்தாளர்கள் ‪#‎நாகூர்ரூமி‬‪#‎வி‬.எஸ்.அமீன், ‪#‎யாழன்ஆதி‬ என இன்னும் பலருடன், இன்னும் இவர்களின் நிழலைக்கூட எட்டாத என் போல் சாமான்ய வாசகியையும் இணைத்த ஒரு நேர்காணல் இறைவன் நாடினால், புதன்கிழமை 27/04/2016 முதல் 28/04/2016 வரை தமிழன் தொலைக்காட்சியில், வாசித்து வாழ்வோம் என்னும் தலைப்பில் ’மானுட வசந்தம் நிகழ்ச்சியில்’ ஒளி/ஒலிபரப்பப்படுகிறது. இதனை சாத்தியமாக்கிய அன்பு சகோதரர் அஹ்மத் ரிஸ்வானுக்கு, என்றைக்கும் போல் என் வாழ்த்துக்களும், து’ஆக்களும்... smile emoticon
தோழமைகளும், சகோதர சகோதரிகளும் இதனைக் கட்டாயம் காணவேண்டும், கண்டு தத்தம் விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் என மனம் விரும்பிக்கோருகின்றேன். மறந்தும் மறந்து விடாதீர்கள்... :)

சமஸ் - ஒரு சினிமா டச்!

சமஸ் சார்,

நேற்றைய இந்துவில் வெளியான தங்களின் கட்டுரையை காலையில் வாசித்தபோது பல வேலைகளும் இருந்ததால் அதிகம் அதில் ஆராயாமல் கடந்து போக வேண்டியிருந்தது. இன்னுமொரு சகோதரரிடம், அதனை வாசித்துவிட்டு உங்களுக்கு தோன்றுவதை எனக்கு தெரிவியுங்கள் இன் ஷா அல்லாஹ் என்று மட்டும் தகவல் தந்துவிட்டு அதை மறந்தே போயிருந்தேன். இரவு வேலைகளிலிருந்து ஓய்ந்து மீண்டும் வாசித்தேன். கூடவே, சகோதரர் ஆஷிரின்  மிக ஆழமான எதிர்வினைக் கட்டுரையையும் சேர்த்தே. இரண்டிலிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அடிப்படைவாதத்தைப் பற்றிய பார்வையிலிருந்து பார்க்கும்போது தங்களுடைய கட்டுரையை வரவேற்கவே செய்கிறேன். விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடிய சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டும் என்பது என் அவாவாகவே இருக்கின்றது. நேரான பாதையில்தான் இருக்கின்றோம் என்னும் பார்வையிலேயே சமூகத்தின் பெரும்பான்மை வாழ்வதால், விமர்சனங்களை சந்திக்கவோ, அவற்றைக் கொண்டு களைகளை அறிந்து கொள்ளவோ இன்னும் பக்குவம் பெறவில்லை என்பதுவும் உண்மை. ஆனால் உண்மையிலேயே நடுநிலை விமர்சனம்தான் கட்டுரையில் எழுதப்பட்டிருந்ததா என்பதே கேள்வி.

தவ்ஹீதுவாதிகளின் மேல் இருப்பது போலவே தங்களின் கட்டுரை மேலும் ஒரு பாமரப் பார்வையில், சில விமர்சனங்கள் இருக்கின்றது. பொதுவாக, ஒரு விஷயத்தைப் பற்றிய கட்டுரை எழுதுகின்றோம் எனில், உள்ளத்தில் தோன்றுவதை அப்படியே எழுதிவிட்டு ‘அளி’ பொத்தானை அழுத்திவிட்டு அமர்வதில்லை நாம். வெறுமனே முகநூலிலும், வலைப்பக்கத்திலும் மட்டுமே அதிகம் எழுதும் என்னைப் போன்றவர்களே, சில விஷயங்களை பட்டியல் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் கட்டுரை எழுத ஆரம்பிக்கின்றோம்..

என்ன செய்தி சொல்லப்போகிறோம், அதை எப்படிச் சொல்ல வேண்டும், எதை எதிர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எதனை நேர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எந்த எந்த சம்பவங்களைச் சொன்னால் எந்த மாதிரியான எதிர்வினை நமக்குக் கிடைக்கும், எதையெல்லாம் வாசகனின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசிக்காமல் எவரும் கட்டுரை எழுதமாட்டார்கள். பல சமயங்களில் முதல் வரைவையே பதிந்து விட்டு சென்று விடும் நானும் சில சமயம் இதையெல்லாம் யோசித்து அதன் பின் பதிவில் திருத்துவது வழக்கம். தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகின்றேன். இன் ஷா அல்லாஹ்.

அப்படித்தான் இந்தக் கட்டுரையும். இரண்டு விதமான முஸ்லிம்களை அடையாளம் காண்பித்துள்ளீர்கள், இந்தக் கட்டுரை வாயிலாய். பிரதானமாக தாங்கள் மேசையில் வைத்துள்ள கருத்துக்கள் தவிர மற்றதெல்லாம் பூசி மெழுகல் மட்டுமே. Fillers, rest.

கட்டுரையின் ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமா’அத்தினை சாடுவது போல ஆரம்பிப்பதாகக் காட்டினாலும் உண்மையில், தன்னுடைய மார்க்கத்தை தீவிரமாக பேணும் முஸ்லிம் எல்லோரும் மற்ற சமூகங்களுக்கு ஆபத்தானவனே என்னும் தொனியின் மூலம் முதல் அடையாளத்தை நிறுவி விட்டு, உடனேயே கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்களை இரண்டாம் அடையாளமாக பதிந்துள்ளீர்கள்.

இந்த இரண்டாம் அடையாளமே மிகைப்படுத்தப்பட்ட தொனியில் சர்வ உலக அரங்கிலும் எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கின்றது என்பதுவே யதார்த்தம். கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்கள் தங்களின் அடிப்படை மத நம்பிக்கைகளில் கை வைக்கவில்லை. கலப்படம் செய்யவில்லை. சகிப்புத்தன்மையுடன் கூடிய மார்க்கமாகவே இஸ்லாம் ஆரம்பம் முதல் இருந்திருப்பதால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட புரட்சி அல்ல.

ஜெருசேலத்தை வெற்றி கொண்ட உமர் இப்னு அல் கத்தாப் முதல் தொப்பிக்களை விற்று தன் வயிற்றுக்கு ஈந்திட்டி ஔரங்கசீப், மலபாரை வெற்றி கொண்ட திப்பு என பலரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களில் கண்டிட இயலும். தத்தம் அடையாளங்களை, நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமலே ஏனைய சமூகங்களையும் அரவணைத்ததால் இன்றைக்கு அவர்களின் பெயர் என்னவாகியது என்பதை. அதே நேரம், சகிப்புத்தன்மை என்னும் பெயரில் தன்னுடைய சுயத்தையும் இழந்த அக்பரின் அடையாளமும், துருக்கியின் கெமால் பாட்ஷாவிற்கு கிடைத்த  அங்கீகாரமும் யாருக்கும் மறந்திருக்காதுதான். அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதென்றால் இரு துருவங்களையும் RAND muslims Vs Extremists எனலாம். Am I right Sir???

மிக முக்கியமாக யாரெல்லாம் Extremist Muslims என்பதற்கான முன்மாதிரிகளையும் கட்டுரையின் ஆரம்பத்திலிருந்தே விதைத்துக்கொண்டே வருகிறீர்கள். ஏழ்மையின் நிலையிலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவனும், பின்னடைவுகளில் சிக்கித் தவிப்பவனும், தன் நாடு, தன் நிலம், தன் குடும்பம் என எல்லாவற்றையும் அழித்தவர்களை, அழிப்பவர்களை எதிர்ப்பவனும் ஐவேளைத் தொழுகை புரிபவனாக இருந்தால் அவனே பயங்கரவாதி என்னும் முத்திரையைப் பதிந்துவிட்டீர்கள். மிக முக்கியமாக, இளைய தலைமுறையைச் சேர்ந்த முஸ்லிம்களை மட்டுமே பட்டியலில் இணைத்துள்ளீர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தாடி வைத்தவரையெல்லாம் இரவு பகல் பாராமல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அரசின் பார்வையில் தாடி வைத்து ஐவேளை தொழுது தன் அடையாளங்களை விட்டுத் தர மறுக்கும் இள வயது முஸ்லிம் நிச்சயம் ஆபத்தானவர் என்னும் பிரசங்கமே பிரதான அங்கமாக இருக்கின்றது.

நல்ல ஒரு கட்டுரையாளன் என்பவன், தான் சொல்ல நினைக்கும் கருத்தை மையமாக வைத்து, சுற்றிலும் காட்சிகளையும் கோணங்களையும் சுவர் எழுப்பி, வாசகனை தன் பார்வையிலேயே கொண்டு சென்று மையத்தில் நிறுத்துவான். அப்படி நோக்கின், தங்களின் வரலாற்று விளக்கங்களோ, தற்கால பிரிவினைவாத அமைப்புக்கள் பற்றிய பட்டியலோ பாமர வாசகனின் பார்வைக்கு வரப்போவதில்லை என்பதுவும், முக்கியமாக முஸ்லிம் இளைய தலைமுறையைப் பற்றிய அதுவும் ஆதம் தீனின் விரிவான காட்சிப்படுத்துதலின் மூலம் உருவாகும் ஒரு பயங்கரவாத பிம்பத்தையும் மட்டுமே ஆழ்மனதில் நிறுவி அதில் வெற்றியும் அடைந்து விட்டீர்கள் சார். இதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். மீதியெல்லாம் இடத்தை நிரப்ப எடுத்துக்கொண்ட குயுக்திகளே தவிர வேறில்லை.

மேலோட்டமாக தவ்ஹீதுவாதிகளைச் சாடும் கட்டுரையாக தாங்கள் காண்பித்தாலும், அடியில் திருவிழாவில் பொங்கலை சாப்பிடாதவனும், தர்காக்களுக்கு செல்வது போன்றே கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் செல்லாதவனும் நிச்சயம் பயங்கரவாதியே என்னும் பேரபாய சங்கு ஊதி விட்டீர்கள்.

இந்திய முஸ்லிம் சமூகத்தில் வஹாபியிஸக் கருத்துக்கள் நுழைந்து இடம் பிடித்திருக்கின்றன என்பதிலும், இஸ்லாமிய மார்க்கத்தின் நெகிழ்வுத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் அகற்ற அவை யத்தனித்துக்கொண்டிருக்கின்றன என்பதிலும் எந்தவித முரண்பாடும் இல்லை எனக்கு. எனினும், அது தங்கள் கட்டுரையின் பேசுபொருள் என்பதுவே உண்மை. வாசகனின் Subconscious mindஇல் இது போய்த் தங்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தே கட்டுரை வரைந்துள்ளீர்கள் என்பதே மெய்.

கடைத்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, தவ்ஹீதுவாதிகளின் மாநாட்டை ஒரு சாக்காக வைத்து, மீண்டும் இளைய சமுதாய முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஆழ விதைத்துள்ளீர்கள். இதே  தாடி வைத்த, ஐவேளை தொழுகின்ற, தங்கள் அடையாளங்களை விட்டுத்தர மறுக்கின்ற இளைய முஸ்லிம்கள்தான் வெள்ளத்தின் போது உயிருடன் வாழ்பவர்களுக்கு இன்னும் ஆயுளை நீட்டிடவும், உயிரிழந்தவர்களை அவர்கள் எந்த மார்க்கத்தைச் சார்ந்தவராக இருப்பினும், சகல மரியாதையுடன் அடக்கம் செய்திடவும் உதவினார்கள் என்பதையும் செய்தார்கள் என்பதை சத்தமேயின்றி அழித்துவிட்டு,  அந்த வெற்றிடத்தில் ஏனைய சமூக மக்களின் மனதில் அழிக்கப்பட்ட விஜயகாந்த, கமல் பட முஸ்லிம் பிம்பத்தை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யவுமே தங்கள் கட்டுரை துணை போயிருக்கின்றது என்பதுவே வேதனை கலந்த உண்மை. முஸ்லிம்கள் விஷயத்தில் ஊடக முகம் எது என்பதை மீண்டும் ஒரு சினிமா டச்சுடன் விளக்கியிருக்கிறீர்கள்.

மிகவும் கடமைப்பட்டுள்ளோம். நன்றி.

இஸ்லாம் வாள் முனையில் பரவியதா???

"பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.முகம்மது நபி பிறந்த சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ மட்டும் இஸ்லாம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அங்கே மட்டும் அம்மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருக்குமானால் இத்தகையதொரு விஷயம் பற்றிப் பேசவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.

மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

முகம்மது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்து சென்றது கி.பி.622-ம் ஆண்டு. பத்தாண்டுகளே அவர் மதினாவில் இருந்தார். கி.பி. 630-ல் மெக்காவை வெற்றி கொண்டதற்கு இரண்டாண்டுகள் கழித்துக் காலமாகிவிட்டார். (கி.பி.632) இந்தக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு எட்டு யுத்தங்கள் வீதம் நடந்திருந்தால்தான் எண்பது யுத்தங்கள் சாத்தியம். அரேபியாவில் அல்ல; உலகில் வேறு எங்குமே கூட அத்தனை யுத்தங்கள் ஒரு சேர நடந்ததாகச் சரித்திரமில்லை.

ஆக, முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.

முகம்மதுவுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், முகம்மது ஒருவர்தான் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார். மதப்பிரசாரம் மட்டுமே அவரது பணியாக இருக்கவில்லை. மாறாக, அவர் மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நாளாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கட்டிக்காக்கும் ஒரு பெரிய இனத்தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் மதினாவாழ் அரேபியர்கள் அத்தனைபேருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், மதினாவின் முடிசூடாத மன்னராகவே அவர் ஆகிப்போனார்.

ஆகவே, முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளின் யுத்தம் என்பது காலப்போக்கில் மதினா மக்களுக்கு எதிரான மெக்காவாசிகளின் யுத்தம் என்று ஆகிவிட்டது. மதினாவைத் தாண்டி இஸ்லாம் பரவத் தொடங்கியபோது, எங்கெல்லாம் முஸ்லிம்கள் அபாயத்தைச் சந்திக்க நேரிடுகிறதோ, அங்கெல்லாமும் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு முகம்மது நபியைச் சேர்ந்தது. கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.

அந்த மூன்று யுத்தங்களுள், பத்ரு யுத்தம் மிகவும் முக்கியமானது. இந்த யுத்தத்தில் பங்குபெற்ற முஸ்லிம்கள் மொத்தம் 313 பேர். எதிரிகளாக இருந்த குறைஷிகளின் படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின்மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றி, வியப்புக்குரியது. (முதலில் படையெடுத்து வந்தவர்கள் குறைஷியர்தாம்.) ஆயிரக்கணக்கான குறைஷி வீரர்களை எப்படி வெறும் முந்நூறு முஸ்லிம் வீரர்கள் வென்றார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமான பதில் ஏதும் கிடையாது. ஆனாலும் ஜெயித்தார்கள். இந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக குறைஷிகள் தொடுத்த அடுத்த யுத்தம்தான் உஹைத் யுத்தம். (அதாவது, உஹைத் என்கிற இடத்தில் நடந்த யுத்தம்.) முகம்மது ஓர் இறைத்தூதரே ஆனாலும், இதுவும் வலிய வந்த யுத்தமே ஆனாலும் இந்தப் போரில் முஸ்லிம்கள் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முகம்மது நபியே வாளேந்தி, கலந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படியும் முஸ்லிம்கள் இதில் தோல்வியே அடைந்தார்கள்.

மூன்றாவது யுத்தமான ஹுனைன் போருக்குக் குறைஷிகள் காரணமல்ல. மெக்கா நகரின் குறைஷி இனத்தவரின் ஜென்மப்பகையாளிகளான ஹவாஸின் என்கிற இன்னொரு அரபு இனத்தவர்களே இந்தப் போரின் சூத்திரதாரிகள். குறிப்பாக மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி என்கிற அந்த இனத்தலைவர்.

பத்ரு போரில் குறைஷிகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதிலிருந்தே அவருக்கு ஒரு பதற்றம் இருந்தது. தங்களது பகையாளிகள் என்றாலும், குறைஷிகள் பெரிய வீரர்கள். அவர்களையே போரில் வெற்றி கொண்டவர்கள் என்றால், முஸ்லிம்களைச் சாதாரணமாக எண்ணிவிடமுடியாது. நாளைக்கு இந்த முஸ்லிம்கள் நம்மையும் தாக்கினால் என்னாவது என்கிற தீவிர முன் ஜாக்கிரதை உணர்வுடன் தாமாகவே வலிந்து தம் இனத்தவரைத் திரட்டி, தோழமையான பிற சாதியினரையும் உடன் இணைத்துக்கொண்டு முஸ்லிம்களுடன் யுத்தம் செய்யக் கிளம்பினார் மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி.

ஒரு முழு நாள் நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.இந்த மூன்று யுத்தங்கள்தான் முகம்மது நபி உயிருடன் இருந்த காலத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட யுத்தங்கள். இவை தவிர உஷைரா யுத்தம், அப்வா யுத்தம், சவீக் யுத்தம், சஃப்வான் யுத்தம், துமத்துல் ஜந்தல் யுத்தம், தபுக் யுத்தம், ஜாத்துர் யுத்தம், நுலைர் யுத்தம் என்று ஏராளமான யுத்தங்கள் நடந்ததாக மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் சொன்னாலும் இந்த யுத்தங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. சில சந்தர்ப்பங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்தது உண்மையே. ஆனால் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் யுத்தம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் சில யுத்தக்களங்களில் முகம்மது நேரில் கலந்துகொள்ள வருகிறார் என்று கேள்விப்பட்டு, யுத்தம் செய்ய வந்தவர்கள் பின்வாங்கிப் போனதாகவும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

முகம்மது நபி ஒரு சிறந்த போர் வீரரா, யுத்த தந்திரங்கள் அறிந்தவரா என்பது பற்றிய போதுமான ஆதாரங்கள் ஏதும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு பெருந்தலைவராக அவர் இருந்தபடியால் இயல்பாகவே அச்சம் கலந்த மரியாதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் இருந்திருக்கிறது. அதே சமயம், முகம்மதின் தோழர்கள் பலர் மாபெரும் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னாளில் கலீஃபாக்களான உமர், அலி போன்றவர்கள், போர்க்களங்களில் காட்டிய வீரத்துக்காகவே இன்றளவும் நினைக்கப்படுபவர்களாக இருந்திருக்கிறார்கள். (முகம்மது நபியின் காலத்துக்குப்பின் நடந்த யுத்தங்கள் பிறகு வரும்.)இவை ஒருபுறமிருக்க, தொடர்ந்து போர் அச்சுறுத்தல்களும் நிம்மதியின்மையும் இருந்துகொண்டே இருந்ததால் மதினாவில் நிரந்தர அமைதிக்கான ஓர் ஏற்பாட்டைச் செய்யவேண்டிய கட்டாயம் முகம்மதுவுக்கு ஏற்பட்டது. மதத்தலைவராக அல்லாமல், ஓர் ஆட்சியாளராக இதனைச் செய்யவேண்டிய கடமை அவருக்கு இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முகம்மது ஓர் உபாயம் செய்தார். மெக்காவிலிருந்து அவருடன் மதினாவுக்கு வந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும், மதினாவாழ் மக்கள் தம் உறவினராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதாவது, முகம்மதுவுடன் மெக்காவிலிருந்து வந்த ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் குழந்தையையும், ஒவ்வொரு மதினாவாசியும் தம் உறவினராக மானசீகமாக சுவீகரித்துக்கொள்வது. இதன்மூலம் மெக்கா முஸ்லிம்களுக்கும் மதினா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏதும் உண்டாகாது. பொது எதிரி யாராலாவது பிரச்னை வந்தாலும் இரு தரப்பினரும் இணைந்தே எதிர்கொள்வார்கள்.

அடுத்தபடியாக மதினாவாழ் யூதர்கள். முன்பே பார்த்தபடி அன்றைக்கு மதினாவில் யூதர்கள் அதிகம் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் மெக்கா முஸ்லிம்களும் மதினா முஸ்லிம்களும் இணைந்தபோது அவர்களின் பலம், யூதர்களின் பலத்தைக் காட்டிலும் அதிகரித்துவிட்டிருந்தது. ஆகவே முகம்மது நபி, மதினாவில் வசிக்கும் யூதர்கள், அங்குள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும்; ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்துகொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.வெறும் வேண்டுகோள் அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ அரசு அறிக்கையே வெளியிட்டார். அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் திட்டவட்டமான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன.

"நமது குடியரசில் தம்மை இணைத்துக்கொள்ளும் யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சம உரிமை படைத்தவர்களாவார்கள். யூதர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத் தடையும் இல்லை. அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது."

"முகம்மது நபி, ஓர் ஆட்சியாளராக, அதிகாரபூர்வமாக வெளியிட்ட முக்கியமான முதல் அறிக்கை இது.

முகம்மது நபிக்குப் பின்னால் வந்த கலிஃபாக்களோ, சரித்திரத்தின் வழியெங்கும் பின்னால் உலகெங்கும் ஆண்டு மறைந்த எத்தனையோ பல முஸ்லிம் மன்னர்களோ, சக்ரவர்த்திகளோ இந்தளவுக்கு மத நல்லிணக்கத்துடன் ஓர் அறிக்கை வெளியிட்டதில்லை. குறிப்பாக, யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் அதுநாள் வரை வாழ்ந்த அடிமை வாழ்வுடன் ஒப்பிடுகையில், முகம்மதுவின் இந்த அறிக்கைப் பிரகடனம், அவர்களாலேயே நம்ப முடியாதது.

இந்த அறிக்கைக்குப் பிறகு, முகம்மது எதிர்பார்த்தபடி மதினாவாழ் யூதர்கள் அங்கிருந்த முஸ்லிம்களுடன் நல்லுறவைத் தொடர்ந்திருப்பார்களேயானால், பின்னாளில் உறங்க ஒரு நிலமில்லாமல் உலகெங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கவே வேண்டியிருந்திருக்காது என்று தோன்றுகிறது. வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றியே யூதர்களுக்கான தனி தேசம் சாத்தியமாகியிருக்கலாம்.

ஏனெனில், கலீஃபா உமரின் காலத்தில் முதல்முதலாக ஜெருசலேத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது, மதினாவில் முகம்மதுநபி யூதர்களின் உரிமைகளாக எதையெதையெல்லாம் வகுத்தாரோ, அதையெல்லாம் அப்படியே கடைப்பிடித்தார்கள். யூதர்களும் முஸ்லிம்களும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்தான் என்பதைத் தமது பல்வேறு நடவடிக்கைகளின்மூலம் அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டி, யூதர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் கூடாது என்று உமர் வலியுறுத்திச் சொன்னார். தங்களது சுதந்திரம் என்பது, தனியான யூததேசம்தான் என்பதை அன்று அவர்கள் உமரிடம் எடுத்துச் சொல்லியிருந்தால்கூட ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.

மாறாக, முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அந்த ஆட்சிக்கு உட்பட்ட அளவில் சுதந்திரமாக வாழ்வதாக ஒப்புக்கொண்டு, பின்னால் மறைமுகமாகச் சதித்திட்டங்கள் தீட்டத் தொடங்கியபோதுதான் யூதர்களின் இருப்பு பிரச்னைக்குள்ளானது.

எப்போதும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்குப் பேர்போன யூதர்கள், அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் ஏன் அப்படியரு முட்டாள்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்கிற கேள்விக்கு விடையில்லாததுதான் சரித்திர வினோதம்.

நன்றி: 
நிலமெல்லாம் ரத்தம் | பா.ராகவன் | குமுதம் ரிப்போர்ட்டர் | 30 ஜனவரி, 2005

தான்சானியா நாட்டு மாணவியை ரோட்டில் நிர்வாணமாக ஓட விட்ட பெங்களூரு அயோக்கிய குண்டர்கள்

 

யாரோ ஒருவர் செய்த கார் ஆக்ஸிடெண்ட்டுக்கு, சட்டத்தைக் கையில் ஏந்தி, எந்த பாவமும் அறியாத சம்பவத்தோடு தொடர்பே இல்லாத இன்னொரு நாட்டுப் பெண்ணை, நிர்வாணமாக்கி பெங்களூரில் நடு ரோட்டில் அடித்து விரட்டியிருக்கிறார்கள். எங்கே சென்றுகொண்டிருக்கிறது இந்தியா?????


இவர்களை பொதுமக்கள் என எந்த வரையறையில் சேர்ப்பது, குண்டர்கள், ரவுடிகள், தீவிரவாதிகள், அத்து மீறும் விலங்குகள் என்றெல்லாம் செய்தித்தாள்களில் போட முடியாதா.... 


இத்தனையையும் அரங்கேற விட்டு சிலையாய் சமைந்திருந்த காவல் துறையினரை என்ன சொல்வது..... ச்சே.... எதற்காக உங்களுக்கெல்லாம் பதவியும் பேட்ஜும்???? அடைக்கலம் தேடி போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை வந்த பெண்ணையும் விரட்டி வெளியேற்றியிருக்கிறார்கள்.

இதையும் மக்களின் மனதிலிருந்து அகற்ற உடனுக்குடனே இன்னொரு சிம்புவை தேடிப்பிடியுங்கள்.... ச்சீ....

செய்தி முழுவதும் வாசிக்க -  http://www.deccanchronicle.com/nation/crime/030216/bengaluru-mob-strips-tanzanian-girl-torch-her-car-as-police-watch.html